அத்வைதம் (अद्वैत)
(Advaita)
By
Sundar (सुन्दर)
நீ (நான் அல்லது நாம்) என்றாலே அது ஆத்மாதான்.
ஐம்பூதங்களால் ஆன இந்த பிரபஞ்சம் பொய்யானது. நீ (ஆத்மா) ஒருவன் மட்டுமே உண்மையானவன்.
பிரும்மம் (Brahman), ஜீவாத்மா, பரமாத்மா என்பதெல்லாம் ஆத்மாவையே குறிக்கும்.
மேலும் ஒரே ஒரு ஆத்மாதான் உள்ளது.
இது எக்காலத்திலும் இருக்கும் உண்மையான பொருளாகும்.
இந்த ஆத்மாவிற்கு வேறாக மற்றும் இரண்டாவதாக எதுவும் இல்லை.
அதாவது இந்த ஆத்மாவைப் போலவே இன்னொரு ஆத்மா இல்லை.
இந்த ஆத்மாவைக் காட்டிலும் இன்னொரு பொருளும் இல்லை.
இந்த ஆத்மா மனமாக (மாயையினால்) வெளிப்படும் போது, மனிதனாகவும், உலகமாகவும், வேறுபட்ட பலவாகவும், இறைவனாகவும் தோன்றுகிறது.
மனிதனுக்கு “நான் செயல்களைச் செய்கிறேன்”, “நான் இன்பம், துன்பம் அனுபவிக்கிறேன்”, “நான் அறிகிறேன்”, இன்னும் இது போல் பல பிரமைகளை அல்லது மயக்கத்தை தருவது இந்த மனமே ஆகும்.
அனைத்திற்கும் காரணம் இந்த மனம் ஆகும். இந்த மனம் ஆத்மாவில் இருந்து வெளிப்படுகிறது. ஆத்மாவில் இருந்து வெளிப்படுவதால் இது ஆத்மாவிற்கு (உனக்கு) வேறு கிடையாது. மேலும், அது உன்னுடைய மனம் என்பதாகிறது.
எனவே, உன்னுடைய மனமே அனைத்தும் ஆகிறது.
எனவே நீயே இந்த உலகமாக இருக்கிறாய்.
நீயே கடவுளாக இருக்கிறாய்.
நீயே தேவதைகளாக இருக்கிறாய்.
நீயே மனிதனாக இருக்கிறாய்.
நீயே ஆண்-பெண்-அலியாக இருக்கிறாய்..
நீயே தாய் மற்றம் தந்தையாக இருக்கிறாய்.
நீயே கணவன் மற்றும் மனைவியாக இருக்கிறாய்.
நீயே சகோதரன் மற்றும் சகோதரியாக இருக்கிறாய்.
நீயே குழந்தைகளாக இருக்கிறாய்.
நீயே நண்பனாக மற்றம் விரோதியாக இருக்கிறாய்.
நீயே ஆரோக்கியமானவனாக மற்றும் நோயாளியாக இருக்கிறாய்.
நீயே பணக்காரண் மற்றும் பிச்சைக்காரணாக இருக்கிறாய்.
நீயே விலங்குகளாகவும் தாவரங்களாகவும் இருக்கிறாய்.
மொத்தத்தில் முன்பு கூறியதுபோல் நீயே அனைத்துமாக இருக்கிறாய்.
“அனைத்து கைகள் மூலம் நீ வேலை பார்க்கிறாய், அனைத்து வாய்கள் மூலம் நீ உன்கிறாய், அனைத்து மூக்கு மூலம் சுவாசிக்கிறாய், அனைத்து கண்கள் மூலம் நீ காண்கிறாய். அனைத்து காதுகள் மூலும் நீ கேட்கிறாய். அனைத்து மனதின் மூலம் நீ சிந்திக்கிறாய்”. அனைத்தும் உன் வெளிப்பாடுகள் ஆகும்.
உன்னிலே அனைத்தும் இருக்கின்றன.
ஆனால் உண்மையில், நீ எல்லையற்றவன், பிரிவுகளற்றவன்.
நீ நீயாக (ஆத்மா) இருக்கும் பொழுது, இந்த உலகம் தோன்றாது. உன்னுடை மனம் இந்த உலகமாக தோன்றும்போது நீ தோன்றமாட்டாய்.
ஒரு பொருள் ஒரு நேரத்தில் ஒன்றாக மட்டுமே இருக்கும்.
நீ நீயாக (ஆத்மாவாக) இருக்கும் போது உலகம் தோன்றாது. மனம் உலகமாக இருக்கும்போது நீ (ஆத்மா) தோன்றமாட்டாய்.
ஒரே நேரத்தில் இரண்டும் தோன்றாது அல்லது இரண்டும் கலந்தும் தோற்றாது.
ஒன்று இருக்கும் போது மற்றோன்று இருக்காது. கயிறு தெரியும் போது பாம்பு தெரியாது. பாம்பு தெரியும்போது கயிறு தெரியாது.
ஈசாவஸ்ய உபநிடத மந்திரம் ஒன்று இதை கீழ்க்கண்டவாறு விளக்குகிறது.
பூர்ண மிதம் பூர்ண மதம் பூர்ணா பூர்ணமு தச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ண மேவா வஸிஷ்யதே
இதன் பொருள்:
இதுவும் முழுமை! அதுவும் முழுமை!
அந்த முழுமையிலிருந்து இந்த முழுமை வந்திருக்கிறது!
முழுமையில் இருந்து முழுமையை எடுத்தும், மிஞ்சியிருப்பதும் முழுமையே!
பிரும்மம் முழுமையாக இருக்கிறது.
பிரும்மமே முழுமையான இந்த உலகமாக தோன்றுகிறது.
எப்படி எனில், கயிறு பாம்பாக தோன்றுவது போல், அப்போதும் (அதாவது வேறொன்றாக தோன்றிய போதும்) முழு பிரும்மம் முழுமையான பிரும்மமாகயிருக்கிறது.
பிரும்மமே மனிதனாகவும், உலகமாகவும் தோன்றுவதற்குக் காரணம் மனம் (மாயை) ஆகும்.
இந்த உண்மையைத்தான் விஞ்ஞானமும், வேதங்களும் கூறுகின்றன. இதுவே அத்வைதமாகும்.
இருப்பது ஒன்று. அது நீ மட்டுமே. நீயே எல்லாமாகவும் தோன்றுகிறாய். அப்படி இருக்க, உன்னிடத்தில் எப்படி எதிர்மறையான உணர்வுகளான, கோபம், பொறாமை, துக்கம், வருத்தம், பேராசை, ஆணவம், பச்சாதாபம், ஆத்திரம், தாழ்வு மனப்பான்மை, பெருமை, மேன்மை, மற்றும் தலைக்கணம் (அஹங்காரம்) போன்றவை இருக்க முடியயும்.
அதேபோல் நேர்மறை உணர்வுகளான சந்தோஷம், சமாதானம், அன்பு, நம்பிக்கை, அமைதி, பணிவு, இரக்கம், கருணை, பெருந்தன்மை, உண்மை, இரக்கம் போன்றவை எப்படி இருக்க முடியும்.
நீ தூயவன், உடலற்றவன், பிறப்பற்றவன், அசைவற்றவன், அழிவற்றவன், மயக்கமற்றவன், பற்றற்றவன், குணங்களற்றவன், குடும்பமற்றவன், குழப்பமற்றவன், மாறுதலற்றவன், தனியாக உள்ளவன், சுதந்திரமானவன், விருப்பு வெறுப்பு அற்றவன், பாவ புண்ணியமற்றவன், தூய்மையானவன் எங்கும் உள்ளவன்.
இந்த உண்மையை தெரிந்துகொள்வதுதான், முக்தி (மோட்சம்) ஆகும்.